பூமியை செதுக்கும் டென்மார்க் ரியல் எஸ்டேட் !



சதுர அங்குலம் 10 டாலர் என்ற கணக்கில் வீட்டை விற்கும் காஸ்ட்லி ரியல் எஸ்டேட் சந்தையை உடைய இங்கிலாந்தை போன்றோ வாராவாரம் ஒரு 200 மாடி டவரை திறந்து அத்தனையுமே ஒரே மாதத்தில் விற்று தீர்க்கும் ரியல் எஸ்டேட் பரகாசூரன்  என பெயரெடுத்த துபாய் போன்றோ டென்மார்க் ரியல் எஸ்டேட்டிற்கு அத்தனை பெரிய அந்தஸ்து இல்லைதான்.

நமது தென்னிந்திய ஒட்டுமொத்த பரப்பை விட துளியூண்டு அதிகம் பெரிதான டென்மார்க், பால்பண்ணை விவசாயத்திற்குத்தான் பெயர்போனது என்று இன்னமும் நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் 2000த்திற்கு பிறகு நீங்கள் டென்மார்க் செய்திகளைஅறிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். களிமண் கட்டடங்களாக காட்சியளிக்கும் ஆப்கானிஸ்தானில் கூட ரியல் எஸ்டேட் விஸ்வரூபம் எடுக்க துவங்கியிருக்க (படத்தை சொல்லலைங்க) சுற்றுலா, கல்வி, விருந்தோம்பல், ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற சிறந்து விளங்கி வரும் டென்மார்க்கில் ரியல் எஸ்டேட் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஆனால், ரியல் எஸ்டேட் என்பது அதி உயர கட்டிடங்களின் (Vertical growth) வளர்ச்சிதான் என்பதை உடைத்தெறிந்து பரப்பளவில்
(Horizontal growth)  வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்கான முக்கிய உதாரணங்கள்தான் டென்மார்கில் நகரங்களை ஒட்டிய புறநகர் மற்றும் கிராமப் புறங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரியல் எஸ்டேட் லே அவுட்டுகள். நம்மூரில் போன்று அல்லாமல் இங்கு ரியல் எஸ்டேட் பிஸினஸை செய்து வருவது சாட்சாத் அரசாங்கமே.

   இதற்காக பயன்படுத்தப்படாத நிலங்களை சீர் செய்வது, சமன் செய்வது, வீடுகள் கட்டுவதற்கான சுற்றுப்புற சூழ்நிலைகளை ஏற்படுத்துவது கண்கள் கவரத்தக்க வடிவங்களில் லே அவுட் அமைப்பது போன்ற வேலைகளை, ஒரு தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது டென்மார்க் அரசு. இவர்களது கை வண்ணத்தில் உருவாகும் லே அவுட்டுகளை பார்த்தவுடனேயே வாங்குவதற்கு ஆவலாக பறக்கிறார்கள் டென்மார்க் மக்கள்.

     அதிலும், ஒஷாகா என்கின்ற பகுதியில் அமைந்திருக்கும் வட்ட வடிவமான சர்க்கிள் லேண்டில் இடம் பிடிக்க அத்தனை போட்டி. 400 அடி குறுக்களவு உடைய மிகப்பெரிய வட்ட நிலத்தில் சுமார் 24 தனி வீடுகளுக்கான லே அவுட்டை இந்நிறுவனம் அரசுக்காக வடிவமைத்து  தந்திருக்கிறது. ஒரு வட்டத்தின் மொத்தப் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 1,25,600 சதுர அடி. இது போன்று 40 வட்ட லே அவுட்டுக்கள் உருவாக்கப்பட்டு அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. ‘வட்ட வடிவமாக லே அவுட் போடப்பட்டால் ஒரு நிலத்தோடு இன்னொரு நிலம் ஒட்டாமல் ஏராளமான இடைவெளி பரப்புடன்   தனி வீடுகளை அமைக்கலாம்’ என்கிறார்கள் இந்த நிலத்தை செதுக்கும் ஆர்க்கிடெக்டுகள். இதுமட்டுமன்றி  புதுப்புது வடிவத்தில் காண்பதற்கு அழகான ரியல் எஸ்டேட் லே அவுட்டுகள் முழு வீச்சில் டென்மார்க் முழுவதும் போடப்பட்டு வருகின்றன.

வழக்கமான வடிவத்தில் அல்லாது உருவான லே அவுட்டுகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டதைக் கண்டு மற்றொரு ஐரோப்பிய நாடான நெதர்லாந்திலும் பூமியை செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் உள்ள ஸ்டார் வடிவ லே அவுட் அதற்கு ஒரு உதாரணம்.

ஏன் கூரை ? ஏன் செலவு ?




ஒருவீட்டின் மொத்த கட்டுமானச் செலவில் கபளீகரம் செய்வது கூரைகளும், சுவர்களும்தான். அதற்காக அவற்றை தவிர்த்துவிட முடியுமா என்ன? எத்தனை செலவு ஆனாலும் அதை அமைத்துத்தானே ஆக வேண்டும் என நீங்கள் சளைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் கூரைகளையும், சுவர்களையும் வைத்துத்தான் நிறைய இன்டிரியர் பணிகள் நடக்கின்றன. அவற்றை அழகாக்குவதற்காகத்தான் நாம் நிறைய மெனக்கெடுகிறோம். ஆனால் இதெல்லாம் நம்முடைய பார்வைதான். நாம் இதற்காக வகுத்து வைத்திருக்கும் வீடு குறித்த இலக்கணங்கள் இதுகாறும் இப்படித்தான் அமைந்திருக்கின்றன.

ஆனால், இலக்கணங்களை மீறுவதும் கூட ஒரு அழகு. அப்படித்தான் ஒரு ஆர்கிடெக்ட் வீட்டின்
அடிப்படை இலக்கணங்களை மீறி  ஒரு புதிய இலக்கணத்தை தோற்றுவித்திருக்கிறார். எல்லோராலும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளபட முடியாத அளவிற்கு இவரது படைப்பு இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் முக்கிய நாடுகள் இவரை திரும்பி பார்க்க செய்திருக்கிறார்.
ஃபெர்னான்டா மேத்யூஸ் என்னும் பெயருடைய பிரேசிலைச் சார்ந்த ஒரு பெண் ஆர்கிடெக்ட் அடிப்படையில் வித்தியாசமாகவே சிந்திக்கக் கூடியவர். சுவர்களும் தரைகளும் இருந்தால்தான் வீடா? மழைக்காலத்திலும், கடுமையான வெயில் காலத்திலும் மட்டும்தான் கூரைகளின் தேவை நமக்கு தேவைப்படுகிறது.

மழையும் அல்லாத வெயிலும் அல்லாத மிதமான வானிலை காலங்களில், கூரையை எதற்காக அமைக்க வேண்டும்? தேவையில்லாத பளுவினை வீட்டிற்கு ஏன் தரவேண்டும்? என சிந்தித்து தான் கட்டிய வீட்டிற்கு கூரையையே தூக்கி விட்டார். அதுமட்டுமல்லாது வீட்டிற்குள் வந்தாகிவிட்டது. முழுவதுமே நம்முடைய வீடு என்கிற போது லுக்கும், படுக்கையறைக்கும், சமையலைறைக்கும் இடையே எதற்கு சுவர்கள். கழிவறைக்கும், குளியலறைக்கும் கூட சிறு
மறைப்பு இருந்தால் போதாதா? என்றெல்லாம் யோசித்து தனக்கு பிடித்த கனவு வீட்டை அதிக செலவில்லாமல் அதேசமயம் ஆடம்பரமாக வடிவமைத்திருக்கிறார் ஃபெர்னான்டா மேத்யூஸ்.

இவர் கட்டியிருக்கும் வீடு பிரேசிலில் சாவ் பாலோ என்கிற பகுதியில் அமைந்திருப்பதால். இவரது நோக்கம் முழுவதும்
வெற்றியடைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் சாவ் பாலோவில் மழை வாய்ப்பு என்பது 1.8 சதவிகிதம் தான். அதற்காக வளைகுடா நாடுகளை போல வெயிலும் வெளுத்து வாங்காது. மிக முக்கியமான விஷயம் கூரை மேல் ஏறி  வீட்டுக்குள் குதித்து
திருடும் திருட்டு படவாக்கள்  இங்கு கிடையாது.

சுமார் 2700 சதுரடியில் (250 சதுர மீட்டர்) அமைந்திருக்கும் இந்த வீட்டில் எந்த பகுதியிலும் கூரையே கிடையாது. சுவர்கள் கூட வீட்டைச் சுற்றி  அமைந்திருக்கும் சுற்றுச்  சுவர்களே. (தாய்ச் சுவர்) அன்றி  பார்டிஷன் சுவர்கள் என்பதே கிடையாது. வெகு சில இடங்களில் ஸ்டீல் கண்ணாடி மற்றும் மரப்பலகைகள் கொண்டு சிறு தடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன அவையும் கலை நயத்தோடு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

“வீட்டிற்கும், வெளியேவும் நாம் காண்கிற ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. சுவர்களுக்கும் கூரைகளுக்கும் உள்ளே அடைப்பட்டுக் கொள்கிற சாதாரண மக்களுக்கு அந்த வித்தியாசம் புரியாது. எனது வீட்டின் அமைப்பும் அவர்களுக்கு பிடிக்காது” என்கிறார் ஃபெர்னான்டா.
உங்களுக்கு பிடித்திருக்கிறதா ?

கிரியேட்டிவ் சைக்கிள் ஸ்டாண்ட் !



என்னதான் நம் ஊரில் சைக்கிள்களை சுற்றுப்புறச்சூழலின் நண்பன், உடற்பயிற்சிக்கு உற்ற துணைவன் என வாயார புகழ்ந்தாலும், நகரத்துத் தெருக்களில் நம்மால் சைக்கிள்களை பார்க்கவே முடியாது. ஏனெனில், அதை இன்னமும் நாம் ஏழ்மையின் சின்னம் என்ற அளவிலேயே பார்க்கிறோம். மேல் நாடுகளில் அப்படி இல்லை. அதுவும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டிற்கு வீடு கார்கள் இருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் சைக்கிள்கள் இருக்கும். அதனாலேயே அந்த நாட்டு அரசுகள் சைக்கிள்களில் செல்வதற்குத் தனி பாதைகளும், வழிகளும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

அரசு சைக்கிள்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த மேல் நாட்டு கட்டுநர்களும், ஆர்க்கிடெக்டுகளும் தாங்கள் உருவாக்கும் கட்டிடங்களுக்கு சைக்கிள் பார்க்கிங் என தனி இடங்களை தவறாமல் வடிவமைக்கிறார்கள். அங்கு குடியிருப்புக் கட்டிடம், வணிக வளாக கட்டிடம் மற்றும் அரசு கட்டிடம் என அனைத்து வகைக் கட்டிடங்களிலும் தவறாமல் சைக்கிள் பார்க்கிங் என பிரதான இடத்தை ஒதுக்கி விடுகிறார்கள். (சென்னை ஷாப்பிங் மால்களில் சைக்கிள்களில் வருபவர்களைக் கண்டால்
வெளியே துரத்தி விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

மேல் நாடுகளில் சைக்கிள்களுக்கென இடம் விடுகிறார்கள். இதுதானா விஷயம்? என சொல்லி நகர்ந்து விடாதீர்கள். அவர்கள் இடம் விடுவதோடு, சைக்கிள் ஸ்டாண்டுகளை அட்டகாசமாக வடிவமைக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு வடிவம். ஒவ்வொரு நிறம். ஒவ்வொரு கான்செப்ட் என பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.

நமக்குத் தெரிந்த சைக்கிள் ஸ்டாண்ட் என்பது நீளமான பைப்புகளை குறுக்கே நிறுத்தி அதில் ஒரு சங்கிலியை இணைத்து சைக்கிள்களை நிறுத்துவோம். அவ்வளவுதானே. ஆனால், இவர்கள் அத்தனை எளிதாக சைக்கிள் பார்க்கிங் ஸ்டாண்டுகளை விட்டுவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இதனை வடிவமைப்பதற்கென்றே தனி ஆர்க்கிடெக்டுகள் உள்ளனர் என்பது நம் புருவத்தை உயர்த்தும் விஷயம்.விலங்குகள், பூக்கள், சீப்புகள், இராட்டினங்கள் போன்ற பல கான்செப்டுகளில் இதுபோன்ற வியத்தகு கை வண்ணங்களைக் காட்டுகிறார்கள் சைக்கிள் ஸ்டாண்டு ஆர்க்கிடெக்டுகள்.

மேலும், தங்கள் இணைய தளங்களில் இது போன்ற பல்வேறு வகையான உருவாக்கங்களை வெளியிட்டு, இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள அனுமதி தருகிறார்கள். (அதை அவர்களாகவே வந்து வடிவமைத்து நிறுவினால்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது). அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் டிசைன்தான் என்ல்லாமல், நாம் வடிவமைக்கும் டிசைன்களிலும் சைக்கிள் பார்க்கிங் ஸ்டாண்டுகளை வடிவமைக்கவும் அவர்கள் தயார்.நம் நாட்டிலும் குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்களை உருவாக்கும் கட்டுநர்கள் இதுபோன்று புதிய முயற்சியில் ஈடுபட்டால் நன்றாகத்தானே இருக்கும் .

ஜீரோ எனர்ஜி வீடு!


அதென்ன ஜீரோ எனர்ஜி வீடு? இயந்திர, மின்சார, வெப்ப ஆற்றல் எதுவுமே தேவைப்படாத வீடுதான் ஜீரோ எனர்ஜி வீடு (ஜீரோ எனர்ஜி சிஸ்டம்) என்பார்கள்.இது எப்படி இயலும் என்று எண்ணத் தோன்றும்.  மிகமிகக் குறைந்த அளவிலேயே இவற்றைப் பயன்படுத்திக் கட்டுமான வேலைகளைச் செய்து முடிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, கான் கிரீட்டைப் பக்குவப்பட வைக்கும் வேலைகளை எடுத்துக் கொள்வோம். இதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. மின்சாரம் தேவைப்படக் கூடாது. செலவு ஆகும். வெப்பம் அல்லது குளிர்ச்சியைச் செயற்கையாக ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கக் கூடாது. இப்படி எல்லா வகையிலும் முடிந்த வரை செலவுகளைக் குறைந்த பட்ச அளவில் வைத்துக் கொள்ள முடியுமா?

என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்?

சிமென்ட்டானது தண்ணீருடன் சேர்க்கப்படும்போது வெப்பம் வெளிப்படுகிறது. கான்கிரீட் கலவை தயாரிக்கப்படும்போது இதுதானே நிகழ்கிறது. அதாவது, வெப்ப ஆற்றல் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த வெப்பத்தையே கான்கிரீட்டைப் பக்குவப்படுத்துவதற்கு உபயோகிக்க வேண்டும். இது ஒரு உத்தி.ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் இருக்கிறது. அது நேரம் செல்லச் செல்லக் குறைந்து கொண்டே போகும். அவ்வாறு குறையவிடாமல் பாதுகாத்து நிலை நிறுத்துவது இன்னொரு உத்தி. வெப்பத்தைக் கடத்தாத கோணிகள், பாய்களைக் கொண்டு மூடி வைத்துப் பாதுகாப்பதை எளிதில் செய்ய முடியும் இல்லையா?
இதுமாதிரியான பல வழிமுறைகளைப் பின்பற்றுவதால், கிடைப்பதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருப்பது குறைந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்தினால் வேறு பல வேலைகளையும் தேவைகளையும் குறைக்கலாம். அதன் மூலம் செலவுகளைத் தன்னால் கீழே கொண்டு வந்துவிடலாம். இதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்பது என்ன? எதற்காக?

முடிந்தவரை இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். மின்சாரத்தை எதிர்பார்த்து நிற்பதைத்  தவிர்க்க வேண்டும். வெப்பத்தைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதற்காக அதை இழக்காமல் இருக்க வழி காண வேண்டும்.ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்ற வழிமுறை இதற்கெல்லாம் தீர்வை அளிக்கிறது. இது இத்தாலி நாட்டில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதை அவர்கள் எப்படிச் சாதித்தார்கள்?

கான்கிரீட் பக்குவடையும் நிலையில் அதனுடன் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் மற்றும் சேர்மானங்களை விதவிதமாக உருவாக்கினார்கள். இந்த விதத்தில் பல கடினமான வேலைகளுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. கான்கிரீட்டைப் பக்குவப்படுத்தும் தேவைக்கு அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாயிற்று. கட்டுமானத்தின் தரம் உயர்ந்தது. பாதுகாப்பான செயல்பாடுகளுக்கு வழி பிறந்தது.  வழக்கமான கட்டுமான உத்திகளைக் காட்டிலும் இது பல வழிகளிலும் மேம்பட்டதாக இருப்பது உணரப்பட்டது.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

கான்கிரீட் தயாரிப்பு, அதைப் பயன்படுத்தும் தேவை, பக்குவப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் குறைந்தபட்ச இயந்திர இயக்கம். மிகக் குறைந்த மின்சாரத் தேவை. மிக மிகக் குறைந்த வெப்பத் தேவை. இவைதான் ஜீரோ எனர்ஜி சிஸ்டத்தின் முக்கிய நோக்கங்கள்.மின்சாரத்தைப் பயன்படுத்தி வெப்பத்தையோ குளிர்ச்சியையோ செயற்கையாக உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கான மின்செலவை மிச்சப்படுத்த முடிந்தாலே அது கட்டுமானச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க உதவும்.மின் செலவு குறைக்கப்பட்டாலே கணிசமானசிக்கனம் ஏற்படும். இயந்திரங்களுக்கான தேவைகளைக் குறைத்தால் அவற்றை இயக்குவதற்குத் தேவைப்படும் ஆட்களின் கூலி வகையிலான செலவுகளும் குறையவே செய்யும்.

     ஜீரோ எனர்ஜி சிஸ்டம் வழிமுறையைப் பின்பற்றுவதால் கான்கிரீட்டின் தரமும் ஆயுளும் கூடக் கூடுகின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. தேவைப்படும் மூலப் பொருட்களின் அளவையும் கணிசமாகக் குறைக்கலாம். ஆற்றலுக்கான செலவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஆட்கூலி முதல் பெட்ரோலுக்கும் மின்சாரத்திற்கும் ஆகும் செலவுகள் எல்லாமே கணக்கில் வந்துவிடும்.
கிளீனியம் கட்டுமான வேதிப் பொருட்களைத் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனம் பிஏஎஸ்எஃப். இவர்கள் கிளீனியம் ஏசிஈ என்ற வேதிப் பொருளை அளிக்கிறார்கள்.

இதை வாங்கிப் பயன்படுத்துவது ஜீரோ எனர்ஜி சிஸ்டத்திற்கு ஏற்ற வழியாகும்.  கான்கிரீட் ஆரம்ப நிலையிலேயே அதிக வலுக் கொண்டதாக உருவாக்குவதற்கு இது உதவுகிறது. அதனை சூப்பர் பிளாஸ்டிசைசர் என்றும் குறிப்பிடுவார்கள். அது அண்மைக்காலக் கண்டுபிடிப்பு.  பாலி கார்பாக்சிலேட் ஈதர் என்றும் அழைக்கப்படுவது உண்டு.கட்டட பாகங்களை முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வழி செய்யும் பிரி காஸ்ட் தொழில்நுட்ப வேலைகளுக்கு இது பெரிதும் பயன்படும். ஆற்றல் தேவைகளைக் குறைப்பதற்கு இது உரிய வழியாகும்.சிமென்ட் பரப்பின் மீது கிளீனியம் மூலக் கூறுகள் வெகு வேகமாக ஈர்க்கப்படுகின்றன. இதன் மூலம் மின்னேற்றம் பெற்ற துகள்கள் ஒன்றையொன்று விலக்கும் நிலை ஏற்படுகிறது. இது தனித் தனி சிமென்ட் துகள்களை நன்கு பரவ வைக்கிறது. இந்தப் பரவல் சீராக இருந்தால் கான்கிரீட் உறுதியடைவது விரைவடையும்.

    சிமென்ட் துகள்களைச் சுற்றிலும் ஒரு போர்வையைப் போல் மூடிக் கொள்ளும் பிளாஸ்டிசைசர்கள் அதற்குள் இருக்கும் ஈரம் அவ்வளவு எளிதில் வெளியேறிவிடாதபடி பார்த்துக் கொள்கின்றன. நீண்ட நேரத்திற்கு ஈரம் நிலை நிறுத்தப்படுவது கான்கிரீட் இறுகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் கிளினீயம், அதிக அளவு சிமென்ட் பரப்பைத் தண்ணீருடன் வினைபுரிய வழி செய்கிறது. இதன் மூலம் சிமென்டும் தண்ணீரும் சேரும் போது உருவாகும் வெப்பம் விரைவில் உற்பத்தியாக நேர்கிறது. இதன் விளைவாக, கான்கிரீட் வெகு விரைவாக உறுதி அடைகிறது.மிகக் குறைந்த வெப்ப நிலைகளிலும், கடுங்குளிர் நிலவும் சூழ்நிலைகளிலும் கூட கிளீனியம் தனது செயல்பாடுகளில் குறை வைப்பதில்லை. ஆகவே இதை எங்கும் பயன்படுத்தலாம் என்றிருப்பதால் கட்டுமானத் தொழிலில் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது.

ஜீன்ஸ் அணிந்த கட்டிடங்கள் !



மனிதர்களுக்கு ஜீன்ஸ் எப்படி நவநாகரீக உடையோ அதேபோன்று கட்டிடங்களுக்கு க்ளேசிங் படலம் ஜீன்ஸாக காட்சி அளிக்கிறது. முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த க்ளேசிங் கண்ணாடி கட்டிடங்கள், அனைத்து ஐடி பார்க்குகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள்,திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள் அனைத்திலும் கிளேசிங் வடிவமைப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளின் கட்டிடங்களில் கிளேசிங் செய்யாத கட்டிடங்கள் காண்பதற்கு அரிது (சமீபத்தில் கட்டப்பட்ட அண்ணா நூலக கட்டிடத்தின் ஒரு பகுதி கூட கிளேசிங் செய்யப்பட்டிருக்கிறது).
மெல்ல மெல்ல குடியிருப்பு கட்டிடங்களுக்கும் கிளேசிங் ஜீன்சை மாட்ட துவங்கியிருக்கிறார்கள் கட்டுநர்கள்.

எதற்காக கிளேசிங் செய்வது?

முதல் தேவை என்று பார்த்தால் மின் செலவைக் குறைப்பது. கிளேசிங் செய்வதற்கும் மின் செலவைக் குறைப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று நினைப்பீர்கள். இருக்கிறது.கிளேசிங் செய்யப்பட்ட கட்டடத்தில் உறுதியான சுவர் பாதுகாப்பாக நிற்கும். என்றாலும் அதன் வழியாக நல்ல சூரிய வெளிச்சம் கட்டடத்திற்குள் நுழையும்.இப்படி இயற்கையாகவே வெளிச்சம் உள்ளே வர வழி செய்து விடுவதால் செயற்கையாக மின் விளக்குகளை எரிய விட வேண்டிய தேவை குறையும். ஆகவே மின் கட்டணமும் இறங்கும். சிக்கனம்.
கட்டடச் சுவர்களை கிளேஸ் செய்தால் வெளிச்சத்திற்கு வெளிச்சமும் கிடைக்கும். தொல்லைகளும் குறையும். மின் சாதனங்களை இயக்க வேண்டிய தேவையும் குறையும்.

கிளேசிங்கின் வகைகள்:

கிளேசிங் வேலைகளை நான்கு விதமாக வகைப்படுத்தலாம். அவை
சிங்கிள் கிளியர் கிளேசிங்,டபுள் கிளியர் கிளேசிங்,லோ ஈ சிங்கிள் கிளேசிங்,லோ ஈ டபுள் கிளேசிங்

சிங்கிள் கிளியர் கிளேசிங்

இது ஒற்றை அடுக்கைக் கொண்ட கிளேசிங். ஒரே கண்ணாடித் தகட்டைக் கொண்டு கிளேஸ் செய்வது.  இதில் வெளிச்சம் முழு அளவுக்கு அனுமதிக்கப்படும். அதே மாதிரித்தான் வெப்பமும்.வெளி வெப்பம் உள்ளே வரும். உட்புறக் குளிர்ச்சி வெளியேறும். அறைக்குள் கதகதப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் இந்த முறை ஏற்றதாக இருக்கும். வெளிச்சமும் தங்கு தடையில்லாமல் உட்புக இது பொருத்தமானது.

டபுள் கிளியர் கிளேசிங்

இது ஒற்றை அடுக்கு கிளேசிங்கை விடச் சற்று மேலானது. வெப்பத் தடுப்புத் தன்மையை உள்ளடக்கியது. இதற்குரிய விளக்கமும் பெயரில் இருந்தே பெறத் தக்கது. இரண்டு அடுக்குகளாகக் கண்ணாடிப் படலங்களை அமைக்கும் முறை இது.இவ்வாறு அமைக்கப்படும் இரண்டு கண்ணாடி அடுக்குகளுக்கு இடையில் காற்று இடம் பெற்றிருக்கும். கண்ணாடி, காற்று, கண்ணாடி என்று வரிசையில் வெப்பம் கடந்து வர, போக வேண்டிய பாதை அமையும். ஆகவே அறைக்குள் வெப்பம் வருவதாக இருந்தாலும் குளிர்ச்சி வெளியேற நினைத்தாலும் இந்தப் பாதை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

கண்ணாடிப் பரப்புகளுக்கு இடையில் இருக்கும் காற்று இந்தப் போக்கை மட்டுப்படுத்தும். கட்டுப்படுத்தும். வெப்ப இழப்பு தடுக்கப்படும். ஒற்றை கிளேசிங்கில் இந்தப் பயன் கிடைக்காது.இரட்டை அடுக்கு கிளேசிங் இருக்குமானால் கண்களுக்கு எளிதாகப் புலப்படும் ஒளி அலைகளை உட்புக அனுமதிப்பது இயல்பாக நடக்கும். இதனால் அறைகளுக்குள் நல்ல பார்வைத் தெளிவு உண்டாகும். குளிர்ப் பகுதிகளில் அறைகளுக்குள் இயற்கையாகவே கதகதப்பை ஏற்படுத்த இது ஏற்ற வழியாக இருக்கும்.

லோ ஈ சிங்கிள் கிளேசிங்

உட்புகுந்த சூரியக் கதிர்கள் மீண்டும் வெளியேறுவதைத் தடுக்க இந்த முறை பயன்படும். ஒற்றை, இரட்டை கிளேசிங் முறைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். நல்ல வெளிச்சமும் வெப்பப் பண்புகளும் கிடைக்கும். தேவைப்படாத ஒளி அலைகளைத் தடுக்கவும் முடியும்.அகச்சிவப்புக் கதிர் வீச்சினால் ஏற்படும் அபாயங்களையும் தடுக்கலாம். வீட்டுக்குள் வெயில் விழுந்தாலும்அதனால் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

லோ ஈ டபுள் கிளேசிங்

கண்ணாடித் தகடுகளின் மேல் தனிப் பூச்சுக்களை ஏற்படுத்துவார்கள். கண்ணாடித் தகடுகளுக்கு இடையில் கிரிப்டான் அல்லது ஆர்கன் முதலிய வாயுக்களை நிரப்புவார்கள். இதுதான் இந்த வகை கிளேசிங்கின் தனித்துவம். இது குளிர்காலத்தில் குளிர் இழப்பையும் வெயில் காலத்தில் வெப்ப அதிகரிப்பையும் தடுக்கும்.
என்றாலும், கிளேசிங் முறை பறவைகளுக்கு எதிரானது என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆம், கண்ணா டியில் பிரதிபலிக்கும் வானத்தின் பிம்பத்தைப் பார்த்து நேரே வந்து முட்டிக்கொள்கின்றனவாம் பறவைகள். இதற்கு ஏதேனும் ரிஃப்ளெக்டர் களை வைத்தால் நல்லது.



காண்ட்ராக்டர்களுக்கு கை கொடுக்கும் கான்கிரீட் கித்தான் !



தமிழில் கான்கிரீட் கித்தான் என அழைக்கப்படும் கான்கிரீட் கேன்வாஸ் என்கிற பொருளானது நம்மவர்களுக்கு ஒரு வேளை புதிய பொருளாக இருக்கும். ஆனால், 2004 ல் இருந்து பிரிட்டனில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு பொறியியல் மாணவர்கள் இதனைக் கண்டுபிடித் தார்கள். கான்கிரீட் கேன்வாஸ்  என்ற பெயரிலேயே ஒரு நிறுவனத்தையும் இவர்கள் 2005 இல் ஆரம்பித்தார்கள். இந்த நிறுவனம் கான்கிரீட்டால் ஆகிய கித்தான்கள். கூடாரங்களை அமைக்கத் தொடங்கியது.
இது வழக்கமான கித்தானின் வடிவத்துடன்தான் இருக்கும். நீட்டலாம். சுருக்கலாம் .சுருட்டலாம்.விரிக்கலாம். பரப்பலாம். வெட்டலாம். ஒட்டலாம். இந்த வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொண்ட பின் அந்தக் கித்தான் துண்டுகளின் மேல் தண்ணீரைத் தெளித்தால் போதும். இறுகிக் கெட்டியாகிவிடும்.

இந்தக் கான்கிரீட் கித்தானை எந்த வகைக் கால்வாயிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. அகலம் குறைவான கால்வாய் என்போம். கவலையே இல்லை. கான்கிரீட் கித்தானைக் கால்வாயின் நீளவாக்கில் பதித்துவிட வேண்டும். கால்வாய் அகலமானதாக இருக்கிறதா?  ரொம்ப நல்லது. அகல வாட்டத்தில் பதிக்க முடியும். கித்தான் துண்டுகள் இணைக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுகிறதா? அப்போதும் சிக்கல் இல்லை.
கித்தானின் முனைகளை ஒன்ஷூன் மேல் ஒன்று படியும் விதத்தில் வைத்துக் கொண்டு தண்ணீரைத் தெளித்தால் போதும். இந்த இடம் நன்றாக ஒட்டிக் கொண்டுவிடும். கால்வாய்களின் ஒரு பக்கக் கரையில் ஆரம்பித்துச் செங்குத்தாகக் கீழே கொண்டு போய் அடிப்பரப்பில் விரித்து மறு
க ரையில் மீண்டும் செங்குத்தாக மேலே
படியுமாறு கித்தானைப் பதிக்க வேண்டியதுதான். கால்வாயின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மிகச்சரியாக ‘ப’ வடிவில் இருக்க வேண்டும் என்பதில்லை. இண்டு இடுக்குகள், சந்து பொந்துகளைக் கொண்டதாக இருந்தாலும் கித்தானை அதற்கேற்ப நீட்டி, மடக்கி, அழுத்திப் பொருத்தி விட முடியும்.
இந்த வேலைகள் முடிந்ததும் கித்தானின் மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். அது கெட்டியாகி உறுதி பெற ஆரம்பிக்கும். இரண்டு மணி நேரம் வரை அத்தகைய கித்தானின் மேல் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொள்ள முடியும். இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் கித்தான் கடினப்பட்டு 80 சதவீத அளவுக்கு உறுதியைப் பெற்றுவிடும்.
வேண்டியஅளவில் தேர்ந்தெடுக்கக் கான்கிரீட் கித்தான் தயார்நிலையில் கடைகளில் கிடைக்கிறது. சுருள் வடிவில் இதனை வாங்கிக் கொள்ளலாம். தேவைப்படும் அளவுகளுக்கேற்ப வெட்டிக் கொள்ளவும் முடியும். ஒரு மீட்டர் குறுக்களவு கொண்ட சுருள் வடிவில் இதனை விற்பனைக்கு விடுக்கிறார்கள். வழக்கமான அகலம் 1.1 மீட்டராக இருக்கும். 4.5 மீட்டர் நீளம் கொண்ட சுருளாகச் சுருட்டி வைத்திருப்பார்கள். இத்தகைய சுருள் ஒன்ஷூன் எடை 60 கிலோ வரை இருக்கும்.
பெரிய அளவிலான பயன்பாட்டிற்குத் தேவைப்படுகிறது என்றால் 200 மீட்டர் நீளம் கொண்ட சுருளைத் தேர்ந்தெடுக்கலாம். இது ஒன்றரை டன் வரையிலான எடை கொண்டதாகக் காணப்படும். அடுத்துக் கவனிக்க வேண்டிய முக்கியமான அளவு, கான்கிரீட் கித்தானின் கனம். தடிமன். இது
5 மி.மீ, 8 மிமீ மற்றும் 13 மி.மீ ஆகிய அளவுகளில் கிடைக்கிறது.
இட, எடை வசதி
கான்கிரீட் கித்தான் ஒரு ஆள் எளிதாகத் தூக்கிச் செல்லக் கூடிய எடை உள்ள அளவில் சுருட்டப்பட்டுக் கிடைக்கிறது. வேலை நடக்க வேண்டிய இடம் எளிதில் அணுக முடியாததாக இருக்கிறதா? கன ரக இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல இயலாதா? ஒரே ஆள் தூக்கிச் செல்லக் கூடியஅளவிலான கான்கிரீட் கித்தான் சுருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.அளவில் பெரிய வேலை. நல்ல போக்குவரத்து வசதி. இத்தகைய சூழ்நிலைகளில்
அதிக அகலம், நீளம், எடை கொண்ட கான்கிரீட் கித்தான்களைப் பயன்படுத்தலாம்.
கலவை போட வேண்டிய அவசியமே இல்லை. கலவை போடுவதற்குத் தேவை இல்லை என்பதால் கலக்க வேண்டிய பொருட்களை எடைபோட்டோ, கன அளவைக் கணக்கிட்டோ அளந்து போட அவசியமே இல்லை. எப்போதும் தண்ணீர் தேங்கியே இருக்கக் கூடிய சூழ்நிலை இருந்தாலும் தப்பில்லை. தண்ணீருக்கு அடியிலேயேயும் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தலாம். அவ்வளவு ஏன்..கடுமையான கடினநீர், உப்புத் தண்ணீர், கடல் தண்ணீரிலும் கூடக் கான்கிரீட் கித்தான் திறம்பட வேலை செய்யும்.
படு வேகம்
தண்ணீர் தெளிக்கப்பட்டு இரண்டு மணி நேரம் வரை கான்கிரீட் கித்தானில் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிடலாம். அதற்குப்பின் ஒரு நாள் இடைவெளி விட்டால் போதும். எண்பது சதவீதம் வரை உறுதிப்பட்டுவிடும். வேக வேகமாகக் கெட்டிப்பட வேண்டும் என்றாலும் கொஞ்சம் மெதுவாகவே இறுகினால் நல்லது என்று நினைத்தாலும் சரி..கான்கிரீட் கித்தான் எதற்கும் ஏற்றதாகத் தயாரித்துத் தரப்படும். தேவை எப்படி என்பதைத் தெரிவித்தால் போதும்.
மாசுக்கே இடமில்லை
கான்கிரீட் கித்தானால் சுற்றுச் சூழல் மாசுபடும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. கான்கிரீட் கித்தான் எடை குறைவானது . இதன் உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் உழைப்பிலும் கரியமில வாயு உருவாக்கப்படும் அபாயம் இல்லை. இதனால் புவி வெப்ப மயமாகும் ஆபத்தும் இல்லை. பலவிதத் தேவைகளுக்கான கான்கிரீட் கித்தானைத் தயாரிப்பதில் வழக்க
மான கான்கிரீட்டுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களில் 95% வரை மிச்சப்படுத்தலாம்.கான்கிரீட் கித்தானில் காரத்தன்மை மிக மிகக் குறைவு. தண்ணீரால் கரைக்கப்பட்டு அரித்துச் செல்லப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சத் தேவையில்லை. மேலும் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்துவதற்குப் பெரிய இயந்திரங்களோ, சாதனங்களோ, மின் சக்தியோ தேவைப்படாது.
கான்கிரீட் கித்தானை எந்த வடிவத்தின் மீதும் கச்சிதமாகப் படியும்படி போர்த்தலாம். பதிக்கலாம். மூடலாம். சந்து பொந்துகளையும் எளிதாக அடைக்கலாம். இரட்டை வளைவுகளைக் கொண்ட வடிவங்களின் மீதும் கச்சிதமாகப் பொருத்தலாம்.இன்னும் சரியாகப் படியாமல் இருக்கிறது என்கிற சந்தேகம் வந்தால் அந்தப் பகுதியை மட்டும் வெட்டி அப்புறப்படுத்திவிட்டு வேறு துண்டைப் பொருத்தலாம். இதற்குச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் கைக் கருவிகளே போதுமானவை.
கான்கிரீட் கித்தான் உறுதியானது. இதில் வெடிப்புகள், விரிசல்கள் ஏற்படாது. சம்
மட்டியால் அடித்தாலும் அடியை வாங்கிக் கொண்டு படிமான
மாகவே இருக்கும். கிழிசல், துளைகள் போன்ற தொல்லைகளும் ஏற்படாது. எந்தத் தேவைக்காக எடுத்துக் கொள்கிறோமோ அந்தத் தேவை நிறைவேறவில்லை என்கிற குறை உருவாகாது.
கான்கிரீட் கித்தான் எந்தவொரு வேதிப் பொருளாலும் பாதிக்கப்படாது. பருவ நிலை
மாற்றங்களால் சிதைவடையாது. புறஊதாக்கதிர்களால் சேதமடையும் போக்கும் காணப்படாது.எனவே, கான்கிரீட் கித்தான் நீண்ட காலம் பழுதின்ஷூ உழைக்கும்.
கான்கிரீட் கித்தானின் ஊடாகத் தண்ணீர் உட்புகாது. இதன் ஒரு பரப்பில் பாலிவினைல் க்ளோரைட் படலம் பொருத்தப்பட்டிருப்பதால் தண்ணீர்க் கசிவு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. வேதிப் பொருட்களாலும் அரிப்பு ஏற்படாது.
கான்கிரீட் கித்தானில் தீப்பிடிக்காது. இதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பரப்பின் மேல் வேறு வகையில் தீ பற்ஷூ எரிந்தாலும் அதன் சுவாலைகளைக் கான்கிரீட் கித்தான் பரவ விடாது. புகை உருவாவதற்கும் வாய்ப்புக் குறைவு. தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்கள் வெளியேற்றப்படுமோ என்றும் அஞ்சத் தேவையில்லை. ஐரோப்பியத் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கேற்பக் கான்கிரீட் கித்தான் தயாரிக்கப்படுகிறது.
கான்கிரீட் கித்தானை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
சுரங்கங்களை வெட்டிக் கொண்டு செல்லும்போது மேல், பக்கவாட்டுச் சுவர்கள் சரிய ஆரம்பிப்பது உண்டு. இதை முட்டுக் கொடுத்துத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.சரிவுகளைத் தடுக்கவும் முட்டுக்கொடுக்கும் தூண்களை உருவாக்கவும் கான்கிரீட் கித்தான் பெரிதும் கை கொடுக்கும்.
ஓரிடத்தில் கலவை கலக்க வேண்டும். பொருட்களைக் கொட்டி வைக்க வேண்டும். காய விட வேண்டும். வெறும் தரையில் போட்டால் மண் ஒட்டிக் கொள்ளும்.இந்த வேலைகள் ஒருசில நாட்களுக்கு மட்டுமே அந்த இடத்தில் நடத்தப்பட வேண்டும்.இது போன்ற தேவைகளுக்குக் கான்கிரீட் கித்தானைக் கொண்டு சீரான சமதளத்தைக் கொண்ட பரப்பை வெகுவிரைவில் அமைத்துவிடலாம். குறைந்த செலவில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளலாம். தேவை முடிந்ததும் அப்புறப்படுத்திவிடலாம்.
குடிநீரைக் கொண்டு செல்வதற்குப் பல விதங்களில் பைப் லைன்களை அமைப்பார்கள். இந்தக் குழாய்ப் பாதைகள் தரையோடு தரையாக அமைக்கப்படுவதும் உண்டு. தரைக்குக் கீழ் பள்ளம் தோண்டிப் பதிக்கப்படுவதும் நடக்கும்.இப்படி எந்த வகையில்அமைக்கப்பட்ட குழாய்ப் பாதையாக இருந்தாலும் அந்தக் குழாய்களுக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாத வகையில் கான்கிரீட் கித்தான் கொண்டு மூடலாம். இரும்புக் குழாய்களையும் கூடக் கான்கிரீட் கித்தானால் போர்த்திப் பாதுகாக்கலாம். தற்போது இரும்புக் குழாய்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கான்கிரீட் கலவையைக் கலந்து போடும் முறைதான் பெரிய அளவில் பின்பற்றப்படுகிறது. கான்கிரீட் கித்தான் இந்தத் தேவையை வெகுவாகக் குறைத்துவிடும்.

சிலகுழாய்கள் தண்ணீருக்கடியில் பதிக்கப்பட வேண்டி இருக்கும். பிவிசி முதலியவற்றால் ஆகிய குழாய்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதந்தபடி இருக்க முயல்வதும் நடக்கும். அவ்வாறு மிதக்கும் நிலையில் இருக்கும் குழாய்களைத் தண்ணீருக்கடியில் தரையோடு ஒட்டிப் பதிய வைக்கவும் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தலாம்.
பல வகையான கேபிள்களைத் தரைக்கடியில் புதைத்து எடுத்துச் செல்கிறார்கள். கான்கிரீட் கித்தானைக் கொண்டு மூடலாம்.. சில இடங்களில் கேபிள்களை மண் ஓடுகளால் பாதுகாப்பாக மூடி இருப்பார்கள். அத்தகைய ஓடுகள் உடைந்துவிடாமல் இருக்க வேண்டுமானால் அவற்றைக் கான்கிரீட் கித்தான் கொண்டு மூடுவது சிறந்தது.
சரிவான தளங்களில் மனிதர்கள், விலங்குகள், வாகனங்கள் செல்வதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். இம்மாதிரியான தேவைகள் எல்லாவற்றிற்கும் கான்கிரீட் கித்தான் பொருத்தமான தேர்வாக அமையும்.சிறு அணைக்கட்டுகளின் சுவர்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

கரைகளில் வேதிப் பொருட்களால் அரிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறதா? அதையும் தடுக்கக் கான்கிரீட் கித்தான் பயன்படுத்தப்படலாம். கான்கிரீட்டால் சுவர் எழுப்ப வேண்டி  இருப்பதைத் தவிர்க்கலாம். இதனால் கணிசமான அளவில் பொருட் சிக்கனம் ஏற்படும்.காண்ட்ராக்டர்களுக்குக் கை கொடுக்கும் கான்கிரீட் கித்தான்கழிவு நீர்க் கால்வாய்களின் கரைகளை வலுப்படுத்திக் கசிவில்லாமல் செய்ய வேண்டும். இந்த வேலைகளுக்கான ஒப்பந்தத்தை எடுத்திருக்கிறீர்களா? வழக்கமான முறையில் கான்கிரீட் கலவை தயாரித்துக் கொட்டும் வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அதற்குப் பதிலாகக் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தலாம்.

     இது சிக்கனமானது. விரைவாக வேலைகளை முடிக்க உதவுவது. பயன்பாட்டில் எந்தக் குறைக்கும் இடம் கொடுக்காதது. நீடித்து உழைப்பது.நீளவாக்கில் கரைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவைகளுக்கு வழக்கமான கான்கிரீட் முறையை விடக் கான்கிரீட் கித்தான் முறை பெரிதும் இலாபகரமானது.100 ச. மீ பரப்பிற்குக் குறுக்காக லைனிங் செய்ய வேண்டிய வேலையா? கான்கிரீட் லைனிங் கொடுக்க ஆகும் கலவைப் பொருள், ஆட்கூலி ஆகியவற்றைக் கணக்குப் போடுங்கள்.  ஒரே நாளில் மூன்றே மூன்றுஆட்களை வைத்துக் கொண்டு இந்த வேலையைக் கான்கிரீட் கித்தான்மூலம் முடித்துவிடலாம். ஒப்பிட்டுப் பாருங்கள்.பாயைச் சுருட்டி எடுத்து வருவதைப் போலவே கான்கிரீட் கித்தானைக் கொண்டு வந்துவிடலாம். இதைத் தேவைப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக விசேஷஷ  வாகனம் எதையும் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

வேதிப் பொருட்களால் அரிப்பு ஏற்படும் என்பதும் கிடையாது. பருவ நிலை மாற்றங்களை நன்றாகவே தாக்குப் பிடிக்கும்.தீப்பற்றும் தன்மை அறவே இல்லை.வெடிப்புகள் ஏற்படாது . மோதல்களையும் அதிர்ச்சிகளையும் தாக்குப் பிடித்து நிற்கும்.
230 கிலோ எடை கொண்ட கான்கிரீட் கித்தானை எடுத்துக் கொண்டால் 172 சதுர அடிப்பரப்பை மூடலாம். இதில் கூரைப் பகுதி 16 சதுர மீட்டர் உடையதாக இருக்கும். செலவு? வழக்கமான செலவைக் காட்டிலும் மூன்றில் ஒருபகுதிக்கும் குறைவாகவே முடித்துவிடலாம்.
கால்வாய்க் கரைகளையும் தளத்தையும் பாதுகாக்கும் விதத்தில் கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தலாம். விரித்துப்பரப்பிப் பொருத்திவிட்டால் போதும். தண்ணீர்க் கசிவு, ஊறல் என்று எந்தப் பிரச்சனையும் இருக்காது.

வழக்கமான முறையில் இந்த வேலைகளைச் செய்ய பள்ளம் எடுக்க வேண்டும். பலகை அடைக்க  வேண்டும் . கலவை போட வேண்டும். படிய விட வேண்டும்.நீராற்ற வேண்டும். கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்தினால் இது மாதிரியான தேவைகள் எதுவும் இல்லை. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் வேலைகளை முடித்துவிடலாம். இதற்கென்று தனிக் கருவிகள் எதுவும் தேவைப்படாது. 30 மீட்டர் நீளம் கொண்ட ஒரு கழிவு நீர்க்கால்வாய் வேலையை வெறும் முக்கால் மணி நேரத்தில் முடித்துவிடலாம்.
கணக்குப் போட்டுப்பார்த்தீர்கள் என்றால் வழக்கமான முறையில் கான்கிரீட் கலவையைத் தயாரித்துப் பயன்படுத்துவதைக் காட்டிலும் தயார் நிலையில் கிடைக்கும் கான்கிரீட் கித்தானை வாங்கிப் பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் விரும்பத்தக்கதாக இருக்கும்.

      வழக்கமான முறையில் ஏற்படுத்தப்படும் கான்கிரீட் பாதுகாப்பு என்போம். இதற்காக 100 மி.மீ கனம் கொண்ட கான்கிரீட் இடப்படுவதாக வைத்துக் கொள்வோம்.இதே அளவு பாதுகாப்பை வெறும் 8 மி.மீ கனம் கொண்ட கான்கிரீட் கித்தானைப் பயன்படுத்துவதன் மூலம் பெற்றுவிடலாம்.கான்கிரீட் கித்தானில் வீணாவது என்று எதுவும் இல்லை. அப்படியே வீணாகிறது என்றாலும் அது மிக மிகக் குறைந்த அளவுக்கே இருக்கும். மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.கான்கிரீட் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் பொருட்களைக் காட்டிலும் பத்தில் ஒரு பங்கு பொருட்களைக் கொண்டே கான்கிரீட் கித்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
கட்டுமானத்துறையில் சகலருக்கும் பயன்படக்கூடிய ஒரு தோழமைப் பொருளான கான்கிரீட் கித்தானைப் பற்றி  மேலும் அறிந்துக் கொள்ளுங்கள்.

இரும்பு நண்பன் இன்டர் ஆர்க் !


கான்கிரீட்டால் ஒரு கட்டுமானத்தை உருவாக்க வேண்டி இருக்கிறது என்போம். அந்த இடத்தில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களால் ஏற்படும் இரைச்சல், தொல்லைகள் கணிசமாக இடம் பெறும். அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும் தடை ஏற்படும். வேலைகள் நடந்து முடிய நீண்ட காலம் ஆகும். எப்போதுதான் இந்தத் தொல்லை முடிவுக்கு வருமோ என்று ஒவ்வொருவரும் கரித்துக் கொட்டுவார்கள்.

    இன்டர் ஆர்க் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தினால் இதற்கெல்லாம் இடமே இருக்காது. எல்லாவற்றையும் தயாரிப்பு ஆலையிலேயே துல்லியமாகத் தயாரித்துவிடுவார்கள். தரம் உறுதிப்படுத்தப்படும். எடுத்து வந்து கட்டுமான இடத்தில் பொருத்த வேண்டியதுதான். இப்படிப் பொருத்தும் வேலையும் எளிதானதே. எந்தெந்தப் பகுதிகளில் இணைப்புகளை ஏற்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் முன்னதாகவே திட்டமிட்டபடி துளைகளை உருவாக்கி இருப்பார்கள்.அது அதற்கு நேராக வைத்து முடுக்க வேண்டியதுதான். வெகு விரைவில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களைக் கொண்டு வேலைகளை முடித்து விடலாம். கட்டுமானமும் கச்சிதமாக அமையும். மற்ற தொந்தரவுகள் இருக்கவே இருக்காது.

    உயரம் அதிகமான கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்று நினைக்கும்போதே அதன் அடித்தளம் அதற்கு ஏற்ற மாதிரி அமைய வேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பிப்பீர்கள். வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்? உயரமான கட்டடம் என்றால் வலுவான அடித்தளம் அமைப்பார்கள்.இதைப் பெரும்பாலானவர்கள் கான்கிரீட்டினாலேயே உருவாக்குவார்கள்.

கலவை கனமாக இடப்படும். ஒட்டுமொத்தமாக ஒரே கட்டியைப் போல் உருவாக்கப்படும். ஒரு முறை இப்படி அமைத்துவிட்டால் காலத்திற்கும் அப்படியே கிடக்க வேண்டியதுதான்.  கட்டடத்தில் ஏதாவது மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அடித்தளத்தில் கை வைக்க முடியாது.கட்டடத்திற்கு வலுவூட்ட வேண்டும் என்று நினைத்தாலும் அதைச் செய்வதில் பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். கூடுதலாக இன்னும் நான்கு மாடிகளைக் கட்டலாம் என்று திட்டமிடுவதும் இயலாமல் போகும்.ஆனால் இரும்பினாலான அடித்தளம் என்றால் இந்தப் பிரச்சனையே இல்லை. எளிதில் மாற்றலாம். சேர்க்கலாம். நீக்கலாம். வலுவாக்கலாம். கூடுதல் தளங்களைக் கட்டலாம். எதுவும் சாத்தியம். இரும்பிலான அடித்தளச் சட்டங்களின் எடை குறைவாகவே இருக்கும். தாங்கும் திறன் அதிகமாகக் கிடைக்கும்.

இன்டர் ஆர்க் மூலம் இதெல்லாம் கிடைக்கும்இன்டர் ஆர்க் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் கட்டுமான இரும்பைப் பயன்படுத்தினால் உங்களுக்கு எவ்வளவோ ஆதாயங்கள் கிடைக்கும். அவை:

    கட்டுமானப் பொருளின் கன அளவு, எடை ஆகியவற்றுக்கும் கட்டடத்தின் வலிமைக்கும் உள்ள விகிதம் கணிசமாக அமையும்.கட்டுமான வேலைகளை வெகுவிரைவாக முடித்துவிடலாம். இதனால் உங்களுக்கு மிச்சமாகும் நேரம் அத்தனையும் பணம்தான்.வலிவூட்டப்பட்ட கான்கிரீட்டால் ஒரு கட்டடத்தைக் கட்டி முடிக்க எவ்வளவு காலம் தேவைப்படுகிறது என்பதைப் பாருங்கள். அதே கட்டடத்தை இன்டர் ஆர்க் பயன்படுத்திக் கட்டிப் பாருங்கள். இந்த வகையில் உங்களது கட்டடம் வெகு விரைவில் பயன்பாட்டிற்குத் தகுந்ததாக ஆகிவிடும்.

முன்னதாகவே அதைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவீர்கள். கட்டடத்திற்காக ஈடுபடுத்திய  முதலீட்டின் மீதான பலனை முன்னதாகவே பெறத் தொடங்கி விடுவீர்கள். வட்டி, மூலதன முடக்கம், வாடிக்கையாளர்களின் நச்சரிப்பு போன்ற பல தொல்லைகளுக்கு விடை கொடுத்து விடலாம். இதனால் கிடைக்கும் மன அமைதிக்கு மதிப்புப் போட
முடியுமா? சலனமற்ற மனம் இருந்தால் இன்னும் பல வேலைகளை எடுத்துச் செல்ல முடியும் இல்லையா?

சட்டக் கணக்கு எப்படி?

கட்டுமானத்தின் உள்கூடாக நிற்கும் சட்டங்களைக் கொஞ்சம் ஆராயுங்கள். இந்தச் சட்டங்களைக் கான்கிரீட்டால் அமைத்தால் அவற்றின் எடை எவ்வளவு வரும் என்பதைக் கணக்கிடுங்கள். அதே சட்டங்களை இன்டர் ஆர்க் இரும்பினால் அமைத்துப் பாருங்கள். எவ்வளவு வித்தியாசம் வருகிறது என்பதை உணருங்கள்.கான்கிரீட்டிற்கும் இரும்பிற்கும் உள்ள எடை வித்தியாசம் எக்கச்சக்கமாக இருக்கும். அப்படியானால் உங்களது கட்டுமானப் பொருளுக்கான விலையும் அந்த அளவுக்கு வேறுபடும். இன்டர் ஆர்க் உங்களுக்கு மிகப் பெரிய சிக்கனத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இட வசதிக்கு இதுதான் ஏற்றது?

அலுவலகப் பயன்பாட்டிற்காகக் கட்டப்படும் கட்டடங்களில் குறுக்கே தூண்களே இருக்கக் கூடாது என்றுதான் விரும்புவார்கள். இம்மாதிரியான தேவைகளை எளிதில் நிறைவேற்றுவதற்கு இன்டர் ஆர்க்தான் கை கொடுக்கும். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ப வரும் பெரிய கலைக் கூடங்களையும் இசை அரங்குகளையும் அமைக்க இதுதான் ஏற்ற கட்டுமானப்பொருளாக விளங்கும்.
முன்னதாகவே அனைத்தையும் திட்டமிட்டுத் தயாரிக்க இன்டர் ஆர்க்கில் வசதி கிடைக்கிறது. இதனால் வீண் விரையங்களை
முற்றிலுமாகத் தவிர்க்கலாம். எவ்வளவு கட்டுமானப் பொருள் தேவைப்படும் என்பதைத் துல்லியமாகக் கணக்குப் போடலாம். அந்த அளவுக்கு மட்டும் கொள்முதல் செய்தால் போதும்.

பல அடுக்குகளைக் கொண்ட கட்டுமானங்களை வடிவமைப்பதை எளிதாக்குவதற்கும் இன்டர் ஆர்க் பெரிதும் பயன்படும். வடிவமைப்பு நிலையிலேயே சிக்கனம் ஆரம்பித்துவிடும். கட்டுமானப் பொருட்களை வாங்குவதற்காகக் கடனில் மூழ்குவதோ, இருப்பு வைக்கும் தேவைகளில் முதலீட்டை முடக்குவதோ நடக்காது.

இரும்புக் கட்டுமானப் பொருட்களை உருவாக்குவதில் எத்தனையோ நவீன உத்திகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. அதிக வெப்ப நிலையில் உருட்டித் தயாரிக்கப்படும்  பகுதிகள் உறுதியான, விரைவான கட்டுமானத்திற்கு வழி வகுக்கின்றன. உயர்ந்த தரம் கொண்டவையாகத் தயாரிக்கப்படும் பாகங்கள் கட்டடத்தின் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கின்றன.
தூண்கள்,  தாங்கிகள்,  உத்தரங்கள், சட்டங்கள் போன்றவற்றின் வடிவமைப்பில் புதுப்புது உத்திகளைப் பயன்படுத்துவதால் கட்டு
மானப் பொருட்கள் இடத்தை அடைத்துக் கொள்ளும் போக்கைத் தவிர்க்கலாம்.

குறுக்குச் சுவர்களையும் மிகுந்த உறுதி கொண்டவையாக அமைக்கலாம். இதனால் ஒட்டு மொத்தக் கட்டமும் அதிக உறுதியுடன் விளங்கும். காற்றினால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிக்கும் விதத்தில் கட்டுமானங்களை உருவாக்குவது எளிதாகும். கட்டடத்தின்
உயரம் அதிகமாக ஆக, ஆக எதிர்கொள்ள வேண்டிய காற்றின் வலிமையும் அதிகமாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கான்கிரீட் இடும் வேளைகளில் கவனமாக இருக்கிறீர்களா ?




கட்டுமானத் தொழிலில் கான்கிரீட் இடுவதற்கு முன், இடும்போது , இட்ட பின் கவனத்தில் கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்ணில் விளக் கெண்ணெய் ஊற்றிக்கொண்டு செய்ய வேண்டும்.
கான்கிரீட் இடுவதற்கு முன்பிருந்தே பல பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்து விட வேண்டும். எந்தெந்தக் கட்டடங்களில் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படக் கூடும் என்பதை ஆராய வேண்டும். அவற்றைத் தடுப்பது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாளைக்குக் கான்கிரீட் போட இருப்பீர்கள். பலகை அடைப்பு வேலைகள் எல்லாம் முடிந்திருக்கும். ஆங்காங்கே மரக் கால்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் ஒரு சித்தாள் வருவார். ஏணியைப் பலகையின் மேல் சார்த்துவார். கிடுகிடுவென்று மேலே ஏறுவார். ஏணி தடதடவென்று சரிய நேரலாம்.
எனவே, கான்கிரீட் இடும்போது மேற்கொள்ள வேண்டிய கீழ்க்கண்ட எச்சரிக்கை எண்களை ஆராய்வோமா?

எச்சரிக்கை எண்1: தேவையில்லாமல் கண்டபடி, பலகைகளின் மேல் ஏறுவதையும் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை எண்2: உயரத்தில் இருந்து வேலையாட்கள் கீழே இருப்பவர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும். விளிம்புகள், ஓரங்கள், முனைகள் பாதுகாப்பாகத் தடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லாத
உயரமான தளங்களில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதோ அரட்டை அடிப்பதோ கூடவே கூடாது.

எச்சரிக்கை எண் 3:பலகை அடைப்பு அதன் முழுப் பரப்பிலும் முறையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதிக்கவேண்டும். எங்காவது ஓரிடத்தில் பலகை பிளந்து கொண்டு நிற்கலாம். பலவீனமாக ஆகி இருக்கலாம். சந்துகள் சரிவர அடைக்கப்படாமல் இருக்கலாம். அத்தகைய தளத்தின் மேல் கவனக்குறைவாகவோ அவசரமாகவோ நடக்க நேர்பவர்கள் தளத்தைப்
பொத்துக் கொண்டு கீழே விழ நேரும்.

எச்சரிக்கை எண்4: பல பேர் தாங்கள் நடக்கும் போது காலை எங்கே வைக்கிறோம் என்பது பற்றிக் கவலையே படமாட்டார்கள். இதனால் தடுக்கிவிழுவதும், சறுக்கி விழுவதும் சகஜமாகிவிடும். வெறும் பரப்பில் விழுந்தாலும் பரவாயில்லை. முனைகள் தாறுமாறாக நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிக் கட்டுமானத்தின் மேல் விழுந்து வைத்தால்? அவ்வளவுதான். கவனக்குறைவாக நடந்து சென்று கம்பிகளின் மேல் இடித்துக்கொள்வதால் ஏற்படும் காயங்களும் விபத்துக்களும் தவிர்க்கப்பட வேண்டியவை.

எச்சரிக்கை எண்5: பலகை அடைக்கப்படுவது அதன் மேல் கொட்டப்படும் கான்கிரீட் கலவையின் பளுவைத் தாங்குவதற்காகத்தான். கொட்டும் வேலை நடக்கும் போது அந்தத் தளத்தின் மேல் நிற்கக் கூடிய ஆட்களின் பளுவையும் தாங்கியாக வேண்டும். அதற்குமேல் சில கருவிகள், சாதனங்கள். போதும். எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா? இது வெறும் மரப்பலகை இல்லை..இரும்புத் தகடுகளால் ஆன அடைப்பு என்கிற நினைப்பே பலருக்கும் அசட்டுத் துணிச்சலை ஏற்படுத்திவிடும்.

எச்சரிக்கை எண் 6: சில கட்டுமானப் பகுதிகளின் வடிவம் சீரற்றதாக இருக்கும்.வளைந்து நெளிந்து செல்வதாக இருக்கும். குறுகலான வழி மட்டுமே கிடைக்கும். மேலே தலையில் இடிக்கும். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் தடுக்கி விழ வாய்ப்பு ஏற்படும். அத்தகைய இடங்களில் அவசரம் அவசரமாக வேலைகளை முடிக்க முனையக் கூடாது. அவசரம் ஆபத்தில் முடியும்.

எச்சரிக்கை எண் 7: பலகை அடைப்பு வேலைகளில் நல்ல கவனத்துடன் செயல்படுகிறவர்களும் இருப்பார்கள். அவர்களும் சில இடங்களில் கோட்டை விட்டுவிடுவார்கள். பழுதாகி உள்ள, பலவீனமான பகுதிகளைச் சரி செய்ய முனைவார்கள். ஆனால், அதற்குப் பயன்படுத்தும் பாகங்கள் விசயத்தில் தவறு செய்து விடுவார்கள். பொருத்தப்பட்ட பாகங்கள் பலமிழந்து போக நேரலாம். இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுவிடலாம். செய்வன திருந்தச் செய் என்பது இங்கு மிக மிக முக்கியம்.

எச்சரிக்கை எண் 8: கூரான கம்பியா? தவிர்க்கவேண்டும். இற்றுப் போன கம்பியா? இடம் கொடுக்கக் கூடாது. கூரான முனைகளைக் கொண்ட கம்பிகள் எங்காவது நீட்டிக் கொண்டு இருக்கின்றனவா? இவை குத்திக் கிழித்துவிடக் கூடும். இரத்தக் காயங்களை ஏற்படுத்தக் கூடும்.  அதே போல், துருப்பிடித்து இற்றுப் போய் நிற்கும் கம்பிகள் ஒடிந்து விழுந்துவிட நேரும். இவற்றை எல்லாம் முன்னதாகவே சோதித்து அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

எச்சரிக்கை எண் 9: என்னதான் அவசரம் என்றாலும் அப்போதும் பொறுமை வேண்டும். இயந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தினாலும்  கூடப் பெரும்பாலான வேலைகளுக்கு மனித உடல் உழைப்பையே நம்பி இருக்க வேண்டி உள்ளது. மனிதர்கள் இயந்திரங்களல்ல. அவர்களுக்குக் களைப்பு, சோர்வு, பசி, தாகம் ஏற்படுவது இயற்கை. சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை, கிடுகிடுக்க வைக்கும் குளிர், ஆளைச் சாய்க்கும் காற்று, மூச்சை அடைக்கும் தூசி, காதைப் பிளக்கும் ஓசை போன்ற சூழ்நிலைகளிலும் கூடக் கட்டாயமாக வேலை செய்தே ஆக வேண்டும் என்று தொழிலாளர்களைப் போட்டு வாட்டி வதைக்கும் விதத்தில் வேலை வாங்கினால் பல விபத்துக்கள் கண்முன் நிகழ்ந்து முடிந்துவிடும். இரக்கம், மனிதாபிமானம் கொஞ்சம் இருக்கத்தான் வேண்டும்.

எச்சரிக்கை எண் 10: பலகை அடைப்பு வேலைகளின் போது ரச மட்டம் வைத்து மட்டம்
சீராக இருக்கிறதா என்று சோதிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் மாட்டார்கள். தேவையற்ற சரிவுகள் சறுக்கலில் முடியும். பலகைகள் நொறுங்கி விழும். கவனம். கவனம்.

எச்சரிக்கை எண் 11: ரொம்பவும் திறமையாகச் செயல்படுகிறோமாக் கும் என்று நினைத்துக் கொண்டு
மறுநாள் வேலைக்குத் தேவையான செங்கல், மணல், சிமெண்டை எல்லாம் கொண்டு போய்ப் புதிதாகக் கான்கிரீட் இடப்பட்ட தளத்தில் அடுக்கி வைக்கிறீர்களா? அதிகப்படி ஆபத்து.  மெதுவாய்ப் பார்த்துக் கொள்ளலாமே? உங்கள் அவசரம் கான்கிரீட்டிற்குப் புரியுமா?
அதிக கனத்தை ஏற்றினாய், நான் உட்கார்ந்துவிட்டேன் என்று சொல்லி விடும். பார்த்துக் கொள்ளுங்கள்.

எச்சரிக்கை எண் 12: வேலைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானவைதானா? வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துகிறீர்களா? வாடகைக்குக் கொடுப்பவர்கள் அந்தப் பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்களா? தரம் குறைந்த பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடுகிறார்களா? கவனமாக இருங்கள். பத்துக் கால்கள் வேண்டி இருக்கும் இடத்தில் எட்டு போதும் என்று சிக்கனம் பண்ண நினைக்க வேண்டாம்.கட்டிடத்திற்கும் பாதுகாப்பு வேண்டும்.
அதே சமயம் ஆட்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்களை தாக்கும் எம்.எஸ்.டி நோய்!



கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது நாம் நன்கு அறிந்ததுதான். ஆனால், அன்றாடம் கூலிக்கு சூரிய ஒளியிலும், இரசாயனங்களின் நெடியிலும், அதிக சத்தத்திலும், சிமெண்ட் கலவை புழுதியிலும், ஈரத்திலும் பணிபுரியும் கட்டு
மான தொழிலாளர்களுக்கு, எண்ணற்ற வியாதிகள் ஏற்படுகிறது என்பது நாம் அரியாத ஒன்று. ஆஸ்துமா, காசநோய், அல்சர் போன்ற தொந்தரவுகள் மட்டுமன்றி தற்போது எம்.எஸ்.டி என்கிற எலும்பு சார்ந்த நோய் கட்டுமானத் தொழிலாளர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர் களை மட்டுமே தாக்கும் நோய் இது என்று சொல்லமுடியாது. ஆனால், ஊட்டச்சத்தில் குறைபாடு உள்ளவர்கள், கடுமையான உழைப்பு மேற்கொண்டும் சரிவர உணவு உண்ணாதவர்கள், ஒரே நிலையில்அமர்ந்தோ,  நின்றோ பணிபுரிபவர்கள், பாரங்களை கையாளுபவர்கள், உயரங்களில் பணிபுரிபவர்கள்,

நோய் எதிர்ப்பு திறன் குறைவானவர்கள், புகை, மது பழக்கம் உடையவர்கள், பிறப்பிலேயே எலும்புகளில் போதுமான பலம் அற்றவர்கள் என பல்வேறு வகையினரையும் இது தாக்குகிறது என்றாலும் மேற்சொன்ன பல்வேறு நிலைகளில் பணிபுரியக் கூடியவர்களாக கட்டுமானத் தொழிலாளர்களே உள்ளனர் என்பது வேதனையான உண்மை.

இந்நோய் பற்றி பெரும்பாலான கட்டுமானத் தொழிலாளர்களுக்குத் தெரியாது. அவர்களால்அதை முன்கூட்டியே உணர்வதும் கடினம். ஆனால் என்ன மாதிரியான வேலைகளைச் செய்யும்போது இந்த நோயால் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொண்டால் எச்சரிக்ககையாக இருக்கலாம்.

என்ன அது எம்எஸ்டி?

எம்.எஸ்.டி. என்பது மஸ்குலோஸ்கெலிட்டல் டிஸார்டர் (Musculoskeletal disorder) என்பதன் சுருக்கமாகும். பெயரில் இருந்தே ஓரளவுக்கு ஊகித்து விடலாம். தசை மற்றும் எலும்புகளைத் தாக்கும் ஒரு வகை நோய் இது. ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதே கடினம். அப்புறமல்லவா சிகிச்சையை மேற்கொள்வது?

உயரமான இடங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உண்டு. அங்கே இருந்து தவறிக் கீழே விழுந்துவிடுகிறார்கள் என்போம். என்ன ஆகும்? எலும்பு முறியும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். இந்த வகை பாதிப்பை உடனே உணர்ந்து கொள்ளலாம். ஆனால், எம்.எஸ்.டி யால் ஏற்படும் விளைவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் கீழே விழுவதால் உண்டாகக் கூடிய அதே அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எப்படி ஏற்படுகிறது?

பொதுவாக, அதிக எடையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான நோய்த் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. கட்டுமானத் துறையில் இது பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. சிமென்ட் மூட்டைகள், கம்பிகள்,பாளங்கள், கருவிகள், கற்கள், ஓடுகள் என்று கனத்திற்குக் குறைவே இருப்பதில்லை.

அதிக எடை என்று எதை எடுத்துக் கொள்வது?

25 கிலோவுக்கு மேல் போகுமானால் அது அதிக எடை என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட எடையைத் தூக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டி இருக்கும்போது தண்டுவடம் பாதிப்பிற்கு உள்ளாகும். சுமார் ஒரு வருட காலத்திற்குள் இதன் விளைவுகள் மோசமாகத் தலை காட்டத் தொடங்கும். ஆளையே முடக்கிவிடும்.

மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிற தொழிலாளர்கள் அதிகம். இந்தியாவிலோ
மற்ற ஆசிய, வளரும் நாடுகளிலோ இந்த நோய் பற்றிப் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. அப்படியே தெரிய வந்தாலும் அவர்கள் அதைப் பெரிய விசயமாக எடுத்துக் கொள்வதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் கூலித் தொழிலாளர்கள் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர்கள்.கடினமாக வேலை செய்வதால் உடல் வலி ஏற்படுகிறது என்று இவர்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வார்கள். அந்த வலியை மறப்பதற்கு ஏற்ற வழியாக மது பானங்களை நாடுவார்கள். இதனால்அவர்களது உடல் நலம் மேலும் பாதிக்கப்படும்.
இன்னொரு வகையிலும் இவர்கள் இது பற்றி அலட்சியமாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை, படிப்பறிவு இல்லாமை,கடின உழைப்பிற்குப் பழகிப்போன குணம் ஆகியவை காரணமாக இவர்கள் இந்த நோயை கண்டுகொள்ளாமலேயே காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். மேலும், இத்தகைய தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த நோய் தாக்கி இருக்கிறது என்று தெரிந்து மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்கள்?

அவர்களை வேலைக்கு அமர்த்தும் கட்டட உரிமையாளர்களோ கட்டுமான நிறுவனங்களோ எந்த வகையிலும் உதவப் போவதில்லை. பெரும்பாலும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் என்பதால் அவர்களுக்கு மருத்துவ உதவி போன்ற வசதிகளும் கிடைப்பது இல்லை. சாதாரணமாய் முதுகு வலிக்கிறது என்று எடுத்துக் கொள்வார்கள்.

சத்துள்ள உணவைச் சாப்பிடாததால் உடல் பலவீனம்அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்கள்.  கைப்பக்குவமாகக் கசாயம் வைத்துக் குடித்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எடுத்துக் கொள்வார்கள். வலியை மறக்க மது அருந்துவது சரியான வழி என்று பின்பற்றுவார்கள். சாதாரண வாயுப் பிடிப்பு என்று ஆரம்பிக்கும் வலி போகப்போக முற்றும். நிரந்தரமாக, கடுமையான வலி தொடரும். வேறு எந்த வேலையையும் செய்யவிடாமல் முடக்கிப் போடும்.

சிலர் இந்தக் கடும் வலியையும் பொறுத்துக் கொண்டு வேலைக்குச் செல்வார்கள். என்ன செய்வது.. நமது தலையெழுத்து அவ்வளவுதான்.. வேறு வழி என்ன இருக்கிறது... எனவே தொடர்ந்து இதே வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணுவார்கள்.

தவிர்ப்பதற்கு வழி உண்டா?

அதிகப்படி சுமையை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறதா? அதிக தூரம் சுமையுடன் நடக்க வேண்டி இருக்கிறதா? திரும்பத் திரும்ப அதே மாதிரி வேலைதானா? வேண்டாம் என்று சொல்ல முடியாது.  கட்டட மேஸ்திரி களும் சூபர்வைசர்களும் விட மாட்டார்கள். வேலையைச் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டுவார்கள். வேகமாகவும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். கூலித் தொழிலாளர்கள் இதில் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது.

முடிந்தவரை அதிகப்படி எடையைக் கையாளவேண்டிய வேலைகளைத் தவிர்க்கலாம். தொடர்ந்து அதே மாதிரியான வேலைகளுக்குப் போவதையும் விட்டு விடலாம். வேறு விதமான, எளிய, சுமை அதிகம் இல்லாத வேலைகளைச் செய்ய முயற்சிக்கலாம்.கொஞ்சம் படிப்பஷூவை வளர்த்துக் கொள்வதும் வேலையை மாற்றிக் கொள்ள உதவும். ஆரம்ப கட்டத்திலேயே நோய் தாக்கி இருப்பதன் அறிகுறி தெரிய வந்தால் உடனே சிகிச்சைக்குத் தயாராக வேண்டும். ஒன்றுமில்லை என்று உதாசீனப்படுத்துவதோ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதோ கூடாது.
கட்டுநர்களும் தங்கள் கண்ணுக்கு கண்ணான தொழிலாளர்களின் நலன் குறித்த நடவடிக்கைகளைமேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

பார்வைத்திறன், செவித்திறன் போன்ற வற்றை இதுபோன்ற தொழிலாளர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கின்றன. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றையும் பரிசோதிக்கின்றனர். இனி கட்டுமான தொழிலாளர்களின் எலும்புகளின் தன்மை, பலம் ஆகியவற்றையும் அவ்வப்போது பரிசோதிக்க ஆரம்பித்தால். எம்.எஸ்.டி நோய் ஆரம்ப கட்டத்திலேயே தெரிய ஆரம்பித்து விடும்.

எம்.எஸ்.டி நோய் தொடர்பான பிரச்சாரங்கள் சமூக நல நிறுவனங்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது