நிறுவும் வேலைகளுக்கு நிறைய நேரம் ஆகிறதா ?



ஒரு கட்டுமானத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஒவ்வொரு பகுதியையும் தயார் நிலையில் செய்து எடுத்துக் கொண்டு வந்திருப்பீர்கள். எல்லாவற்றையும் கோர்த்து இணைக்க வேண்டியதுதான் பாக்கி.ஆனால், பெரும்பாலான வேலைகளில் இது எளிதாக முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பீர்கள். அது இழுத்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.  அவ்வாறு இடையூறுகள், இழுத்தடித்தல்கள் இல்லாமல் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டுமா? சில உத்திகளைப் பின்பற்ற முயற்சியுங்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை மற்றும் அளவுகளில் தேவைப்படும் பாகங்கள் கொண்டு வந்து இறக்கப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் இதைச் சரியாகச் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமானப் பொருட்களைக் கையாளும் விதமும் முக்கியமானது. முற்றிலும் மனித உழைப்பை நம்பியே இயங்க வேண்டி இருப்பதைக் குறைக்க வேண்டும். அது அதற்கு உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்த முன் வர வேண்டும்.

தனித் தனி பாகங்களைச் சரியான வரிசையில் இணைத்துப் பொருத்தும் வேலையை வரிசைப்படி செய்து முடித்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது, எந்த இடத்திற்கு எத்தனை எண்ணிக்கையில் பாகங்கள் வந்து சேர வேண்டும் என்பதைத் திட்டமிடுவதே இந்த வேலைகளின் தொந்தரவுகளைக் குறைக்கும் முக்கியப் பகுதியாகும். கொண்டு வந்த பொருட்களை எங்கே இருப்பு வைப்பது என்று திண்டாடும் நிலை ஏற்பட்டுவிடாமல் எல்லா வற்றையும் கச்சிதமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் சொன்னபடி கொண்டு வந்து இறக்கி வைத்துவிடுவார்கள்.

இறக்கி வைப்பதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றாலும் திருட்டு, கொள்ளை, கவனக்குறைவு, முறைகேடான கையாள்தல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இழப்பு ஏற்படும். 
 
சாரம் கட்டுதல், உயர்த்து வதற்கான மேடை அமைத்தல் போன்ற வேலைகள் எல்லாம் தற்காலிகமானவைதான். வேலை முடிந்ததும் பிரித்து எடுத்துவிடப் போகிறோம், இதற்குப் போய் ஏன் அதிகம் மெனக்கெட வேண்டும் என்கிற மெத்தனம் கூடவே கூடாது.
ஏனென்றால் இம்மாதிரியான ஏற்பாடுகள் பாதுகாப்பில்லாதவையாக இருக்கும். சேதங்கள் ஏற்பட வழி வகுத்துவிடும். எனவே கவனமாகச் செய்ய வேண்டியது அவசியம்.பாகங்களை எந்த வரிசைப்படி அடுக்க வேண்டும், எந்த வரிசைப்படி எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே பெரிய கலை. இதை உரிய விதத்தில் செய்பவர்கள் வேலைகளை எளிதாகவும் வேகமாகவும் முடித்துவிடுவார்கள்.
    வரிசைக்கிரமத்தை மாற்றுகிறவர்கள் சிண்டைப் பிய்த்துக் கொள்வார்கள்.  வேலைகளிலும் தேவையற்ற தாமதம் திணிக்கப்படும். சின்னச் சின்ன விசயங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது  பெரிய ஆதாயத்தைக் கொடுக்கும்.சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் நிறுவும் வேலைகளுக்கு ஏன் நிறைய நேரம் ஆகப் போகிறது?