அந்தரத்தில் ஆடும் வீடு !




தரையில் போதுமான அஸ்திவாரம் இருந்தாலே ஆட்டம் காணும் கட்டிடங்கள் நம் நாட்டில் அதிகம். ஆனால், கட்டிடத்தில் 60 சதவீதம் அந்தரத்தில் அமைக்கப்பட்டும் ஆடாமல் இருக்கிறது. இது நார்வே ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸ் என்பவரின் கைத்திறம்.

    வின்னி மாஸுக்கு சொந்தமான பண்ணை நிலம் ஒன்று இருக்கிறது. அங்கு தனது ஓய்வு வீட்டை வடிவமைக்க நினைத்த போது இடம் போதவில்லை. ஏனெனில், அவரது நிலத்தில் சுமார் 20 அடி அளவிலான பெரிய சரிவு ஒன்று இருந்தது. முதலில் அந்த சரிவினை நிரப்பி மேல்மட்டத்துடன் சமப்படுத்துவதற்கு முயற்சித்தார். ஆனால், அவரது ஆர்க்கிடெக்ட் மூளை விழித்துக் கொண்டு பாதி நிலத்திலும், பாதி அந்தரத்திலும் ஏன் வீட்டை அமைக்கக்கூடாது? என கேள்வி கேட்கவே படத்திலுள்ள வீட்டை வடிவமைத்து கட்டியும் முடித்துவிட்டார்.
50 அடி நீளமும், 20 அடி அகலமும் உடைய இந்த வீடடில் 20 அடி நீளப்பகுதி உயர்மட்டத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 30 அடி நீளப்பகுதி யாதொரு தாங்கு தூண்களும் இன்றி  அந்தரத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தில்லையா என ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸிடம் கேட்டபோது, “பொதுவாக இதுபோன்ற கட்டுமானங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிச்சயமாக நிலத்தில் ஊன்றியிருக்க வேண்டும் என்பது விதி. அதை இங்கு நான் தைரியமாக மீறியிருக்கிறேன். ஆனால், எவ்வித ஆபத்தும் இதற்கில்லை. ஏனெனில் அந்தரப் பகுதியில் இருக்கும் வீட்டிற்கான கவுன்டர் வெயிட்டை 6 கான்கிரீட் பில்லர்கள் கொண்டு நிலப்பகுதியில் ஏற்றியிருக்கிறேன்” என்கிறார் வின்னி மாஸ். கடல் அரிப்பிற்குப் பிறகு கடலோரம் கட்டப்பட்ட வீடுகள் இந்தியாவில் பெரும்பாலும் அந்தரத்தில்தான் ஆடும் என்பது வேறு விஷயம்.