ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்கு வீடு !


அஸ்திவாரம் போடுவதற்கே இரண்டு, மூன்று லட்சம் செலவாகும் இந்த காலத்தில்  வெறும் ரூ.6 லட்சத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் சென்னை ஐஐடி பொறியியல் துறையினர். அதுவும் வெறும் குடிசை வீடு அல்ல. கிட்டத்தட்ட 2000 ச.அடி பரப்புடைய இரண்டடுக்கு மாடி வீடு கட்டுவதற்கு ரூ.6 லட்சம்தான் செலவாகிறதாம். அதெப்படி? சிமெண்டும், கம்பியும், செங்கல்லும், ஆட்கள் கூலியும் விண்ணைத் தொடும் இந்த காலக்கட்டத்தில் இது சாத்தியமா? என நீங்கள் ஆச்சரியப்படலாம்.
இது முழுக்க முழுக்க வழக்கமான மூலப்பொருட்கள் அல்லாத வித்தியாசமான மூலப்பொருட்களைக் கொண்டு
கட்டப்பட்டிருக்கும் கட்டிடமாகும்.

“உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎஃப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அளவு சிமெண்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்துதான் இந்த வீட்டை அமைத்திருக்கிறோம்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம்தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய்விடுமா? என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த புதிய தொழிற்நுட்பம் நிச்சயம் பயன்படும்” என்கிறார் டாக்டர் தேவதாஸ் மேனன்.
பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்  போர் டுகளை  தயாரிக்கின்றன. எதிர்காலத்தில் தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது. ஜி.எஃப்.ஆர்.ஜி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும்.
ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில் கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.