சாரம் கட்டுதலில் சாதித்த வெள்ளையர்! மே -2013


கட்டுமானப்பணிகளில் சாரம் கட்டுதல் மிக முக்கிய அம்சமாகும். இதை ஓரளவு எளிமைப்படுத்திய பெருமை இங்கிலாந்தைச் சார்ந்த ஜாக்ஸன் என்கிற பொறியாளரையேச் சாரும்.

 கட்டுமான வேலைகளில் சாரம் அமைப்பதற்கே கணிசமான நேரம் செலவாகிறது என்பதைக் கண்டுணர்ந்த ஜாக்ஸன், இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று முழுமூச்சாக இறங்கினார்.

அவ்வாறு அவர் செய்த முயற்சியின் விளைவாகத்தான் ஒற்றைக் கம்பச் சாரம் அமைப்பு முறையை உருவாக்கினார். இரவில் இந்தச் சாரத்தை அமைத்தால் விடிந்ததும் கட்டுமான வேலைகளை விரைவாக முடித்துவிடலாம். என்றாலும், இந்தக் கண்டுபிடிப்பே போதும் என்று ஜாக்சன் ஓய்வெடுத்துக்கொள்ளவில்லை.

இரும்புக் குழாய்களைக் கொண்டு வேகமாகவும் எளிதாகவும் உறுதியாகவும் சாரம் அமைக்கும் முறையைக் கண்டுபிடித்தார். வேண்டிய உயரத்திற்கு உயர்த்தவும் தாழ்த்தவும் இதில் வசதிகளைப் புகுத்தினார். பயன்படுத்திப் பார்த்த வாடிக்கையாளர்கள் ஜாக்சனுக்குக் கணிச மான ஆர்டர்களைக் கொடுத்தார்கள். என்றாலும் கூட ஜாக்சனுக்கு இதில் திருப்தி ஏற்படவில்லை.காரணம், இரும்புக் குழாய்கள் கன மானவை. கையாள்வதற்குக் கடினமானவை.பராமரிப்புச் செலவும் கூடுதலாக ஆகும்.

அடிக்கடி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பெயிண்ட் அடிக்க வேண்டும். கட்டுமான வேலைகள் நடைபெறும் இடங்களில் ஏற்படும் தூசிகளால் சாரங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.கனமான சாரக் கம்பங்களைத் தூக்கிச் செல்ல அதிக உடலுழைப்புத் தேவைப்படும்.இதனால் கூலிச் செலவு அதிகமாகும். கால தாமதம் ஏற்படும்.

இத்தகைய குறைகள் எல்லாவற்றையும் களைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஜாக்ஸன்.அப்படித்தான்அவர் அலுமினியத்தால் ஆகிய சாரங்களை அமைப்பதில் பெரும் வெற்றிகண்டார். உலகிலேயே முதன்முதலில் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு எளிதில் இயக்கப்படக் கூடிய சாரத்தை அவர் உருவாக்கினார்.இந்தச் சாரத்தைக் கொண்டு ஒரு சட்டத்திற்கு 10886 கிலோ வரை தாங்க முடியும். பவுண்ட் எடைக் கணக்கில் இது 24000. இப்போது இந்தச் சார வகைகளை 12 கே என்று குறிப்பிடுகிறார்கள்.