தானியங்கி கலவைப் பூச்சு இயந்திரம்.


வணக்கம் கட்டுமானத்துறை நண்பர்களே. கட்டுமானத்தை பிளான் செய்து சுற்றிலும் சுவர்களை எழுப்பியாகிவிட்டது.அடுத்து என்ன?சுவற்றிற்கு மேற்பூச்சு பூசுதல் தானே!இது முடிந்தால்தான் வீடு வீடாக இருக்கும்.கட்டுமானம் நிறைவுபெற்ற கட்டுமானங்களாக இருக்கும்.ஆனால்,கலவை பூசுதல் என்பது சுலபமான காரியம் அல்ல என்பது உங்களுக்குப் புரியும். ஒரு அங்குல தடிமனுக்கு மேற்பூச்சு பூச வேண்டுமெனில்,கொலுத்து கரண்டியால் எத்தனை தடவை நாம் சிமெண்ட் கலவையை அள்ளி ஈரச்சுவற்றில் வீச வேண்டி இருக்கிறது?பிறகு அதை லெவல் செய்ய வேண்டும் அதற்குப்பிறகு,மேற்பூச்சுக்கு வழவழப்பு தன்மை கொடுப்பதற்கு தனியாக சிமெண்ட் குழம்பைத் தடவ வேண்டும்.இதை செய்யும் கட்டுமானத் தொழிலாளியை நாம் பெரியாள் என்று அழைப்போம்.அவருக்கு உதவியாக இரண்டு சித்தாள்களை தந்துவிட வேண்டும்.இந்த மூன்று பேரும் சேர்ந்து ஒரு நாளெல்லாம் 10க்கு 8 அடி சுவற்றிற்கு மேற்பூச்சு பூசினாலே அதிகம்.அப்படியெனில்,ஒரு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களுக்கு கலவை பூசவேண்டுமெனில் எத்தனை நாட்களாகும்? எத்தனை செலவாகும்? தனி வீட்டின் கதையே இப்படி என்றால்,பன்னடுக்கு மாடி கட்டும் பில்டர்களின் நிலை என்ன?அவர்கள் எத்தனை சதுர அடி சுவற்றிற்கு கலவை மேற்பூச்சு பூச வேண்டும்?அதற்கு எத்தனை நாட்களாகும்?எத்தனை நபர்களுக்கு எத்தனை நாள் கூலி தரவேண்டியிருக்கும்? ''சரி சரி அதற்குதான் மோர்டார் ஸ்பிரேயிங் இயந்திரம்(Mortar Spraying Machine)போன்ற நவீன உபகரணங்கள் வந்திருக்கின்றனவே' என நீங்கள் சொல்லலாம். கொள்கலன் சிறியதாக இருப்பது.கையாள்வதில் அதிக சிரமம்.எப்போதுமே தோளில் தூக்கி வைத்திருக்கவேண்டிய அவசியம்,மேலும்,அதை கையாள்பவருக்குத் தொழிற்நுட்ப அறிவு தேவைபடுவது போன்ற பல கூறுகள் மோர்டார் ஸ்பிரேயிங் போன்ற இயந்திரங்களைபரவலாக பயன்படுத்துவதில் சிரமங்கள் அளிப்பதாகவே உள்ளன. இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லாத இயந்திரம் நான்.நான் என்றால் தானியங்கி கலவைப் பூச்சு இயந்திரம் (Automatic Wall Plastering Machine).கட்டுமானத்தின் சுவர் பூச்சுக்கு,குறிப்பாக உட்புற சுவர்களுக்கு பக்காவாக பொருந்துகிற கலவைப் பூச்சு இயந்திரம் நான். அளவில் சிறியதாக இருப்பதால் வெகு எளிதாக என்னை நீங்கள் நிறுவ முடியும்.என்னுடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்டீல் டிரேயில் 20 முதல் 30 கிலோ வரையிலான சிமெண்ட் கலவையைக் கொட்டிவிட வேண்டும்.மேற்பூச்சு பூச வேண்டிய சுவற்றுக்கு அருகில் என்னை நிறுத்திட வேண்டும்.கலவைப்பூச்சு ஒரே சீராக வருவதற்கும்,ஆடாமல்,அசையாமல் வருவதற்கும்,இரு ஸ்டீல் பைப்புகளை தரைக்கும்,மேல் தளத்திற்கும் இடையே இணைத்துவிட்டால் அதில் சிமெண்ட் கலவை டிரே மேலும் கீழும் சென்று வரும்.ஒரு தடவை டிரேயில் கலவை நிரப்பி விட்டால் 3 அடி அகலத்திற்கும் 8 அடி நீளத்திற்கும் சுவர் பூச்சு செய்து விடுவேன்.முதலில் கீழிருந்து மேலே செல்லும் போது சிமெண்ட் கலவையை தெளித்துவிட்டு,மேலிருந்து கீழே வரும்போது கலவையை சீராக்கி விடுவேன். இதை நான் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள்தான்.மனிதர்கள் இதை செய்தால் எப்படியும் இரண்டு மணிநேரம் ஆகிவிடும். தேவையான அளவிற்கு சிமெண்ட் கலவையை நீங்கள் ரெடி செய்து வைத்திருந்தால்,15 அடிக்கு 20 அடி அளவுள்ள அறைக்கு கலவை மேற்பூச்சு செய்ய எனக்கு அதிகபட்சம் 3 மணி நேரமே ஆகும்.இந்த் வேகத்தில் நான் வேலை செய்தால் உங்கள் வீடு அல்லது ப்ரொஜெக்டின் ஒட்டு மொத்த சுவர்மேற்பூச்சு வேலையும் சில நாட்களிலேயே முடிந்துவிடும். சுவற்றை மட்டும்தான் உன்னால் கலவை பூச முடியுமா?இல்லை .என்னால் கூரையின் உட்புறம் கூட கலவையை பூச முடியும்.என்னை இயக்குவதற்குத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் தேவையில்லை.சாதாரண இரண்டு ஆபரேட்டர்களே போதும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.மேனுவலாக பிளாஸ்டரிங் வேலை செய்யும்போது வீணடிக்கப்படுகிற சிமெண்ட் கலவையை விட என்னைப் பயன்படுத்தி கலவைப்பூச்சு மேற்கொள்கிறபோது குறைவான அளவே சிமெண்ட் கலவை வீணாகும் என்பதும் எனது பிளஸ் பாயின்ட்.சுவரும் கூரையும்,மற்றும் சுவரும்,சுவரும்,கூடுகிற மூலைகளில் மட்டும் நீங்கள் மேனுவலாக ஒரு டச் அப் செய்துகொள்ள வேண்டியிருக்கும். ரூ.50,000-ல் தொடங்கும் என்னைப் போன்ற தயாரிப்புகள் சீனாவில் மிகப் பரவலாகக் கிடைகின்றன.இவற்றை நீங்கள் பெற வேண்டுமெனில்,குறைந்தபட்சம் இரண்டு இயந்திரங்கள் ஆர்டர் செய்தாக வேண்டும்.மேலும் பணம் செலுத்திவிட்டு,15,20 நாட்கள் காத்திருக்க வேண்டும் போதாதற்கு சுங்க வரி,விற்பனை வரி வேறு செலுத்த வேண்டும்.இந்த தொல்லையெல்லாம் தீர்க்க ஆட்டோமேட்டிக் வால் பிளாஸ்டரிங் இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யும் ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று இருக்கிறது.இங்கு ஆர்டர் செய்தால்,அடுத்த நாள் டெமோ அதற்கு அடுத்த நாள் டெலிவரி.